பூரி : மொத்த உலகமும் கரோனா வைரஸின் பிடியில் சிக்குண்டு உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் போன்ற பல்வேறு இன்னல்களை தற்போதுவரை சந்தித்து வருகிறது.
மக்களை நோய்த் தொற்றிலிருந்து காக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் அவையும் சில உயிரிழப்புகளுக்கு காரணமாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கோயில் நகரமான பூரியில், பல்வேறு தரப்பினரும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் வட்டிக்குப் பணம் வாங்கி குதிரைகளை வாங்கியுள்ளனர். குதிரைகளினே் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவும் எண்ணி இந்தத் தொழிலி ஈடுபடத் தொடங்கினர். ஆனால், மார்ச் மாதத்திலேயே கரோனா வைரஸ் படிப்படியாக பரவத் தொடங்கியதை அடுத்து, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் பலரும் தங்களது தொழிலை கைவிட்டு வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே சென்ற நிலையில், பலரும் ஒருவேளை உணவிற்கே அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கும் அவலம் ஏற்பட்டது.
மேலும், பூரியில் தங்களது வாழ்வாதாரத்தை செழிப்பாக்க விரும்பி குதிரைகளை வாங்கிய மக்கள் அவற்றை கவனிக்க முடியாத சூழலுக்கு உள்ளாகினர். தொடர்ந்து எட்டு மாதங்களாக இதே நிலை நீடித்ததையடுத்து, பூரியில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட குதிரைகள் உணவின்றி இறந்துள்ளன.
இந்நிலையில், விலங்குகளைப் பராமரிக்க எவ்வித நடவடிக்கைகளையும் அரசு சரிவர எடுக்காததைக் கண்டித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலங்குகளைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
பூரி நகரத்தில் குதிரைகளும் ஒட்டகங்களும் தொடர்ந்து உயிரிழந்து வரும் சூழலில், வரும் நாள்களில் உணவின்றி பட்டினியால் சுமார் இருநூறு குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்து போகக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.