1992ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நடத்திவந்தது. இந்த மாத தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியா கோபால் தாஸ், உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் ஆகியோர் பாபர் மசூதியை இடிக்க முயன்ற சமூக விரோதிகளை தடுக்க முற்பட்டு உள்ளனரே தவிர, சதித்திட்டம் செய்யவில்லை. அதேபோல, குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தரப்பு உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் தாக்கல் செய்யவில்லை என கூறி அவர்களை விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தனது வீட்டில் இருந்தபடி காணொலி வாயிலாக எல்.கே.அத்வானி பங்கேற்றார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட எல்.கே.அத்வானி, " பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனை முழு மனதோடு, சிரம் தாழ்ந்து வணங்கி வரவேற்கிறேன்.
இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. குறிப்பாக, எனக்கும், நான் சார்ந்த பாஜகவுக்கும் கிடைத்த வெற்றி.
அயோத்தியில் ராமர் பிறந்த புண்ணிய தளத்தில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் எனது நீண்ட கால கனவான ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்தது. இது என்னுடைய முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
அந்த வரிசையில் இன்று மற்றொரு மகத்தான தீர்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம். ஒவ்வொரு தருணத்திலும் எனக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, சட்டரீதியான போராட்டங்களை நடத்தி வந்த ஸ்ரீ மகிபால் அலுவாலியா, அவரது மகன் அனுராக் அலுவாலியா மற்றும் அவரது வழக்குரைஞர்கள் குழுவினருக்கு என்னுடைய நன்றி.
அயோத்தி விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த கட்சியினர், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன்.
இந்துக்களின் கனவான ராமர் கோயிலை காண வேண்டுமென காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.