மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 8ஆம் தேதி காலமானார்.
டெல்லியில் உள்ள பாஸ்வானின் வீட்டில், அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று (அக். 09) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், மதியம் இரண்டு மணியளவில் பாட்னாவில் உள்ள ஜனார்தன் காட் என்னும் இடத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பாஸ்வான், மாணவப் பருவம் முதலே அரசியலில் ஆர்வமாக இருந்துவந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், அதன் விளைவாய் காவல் துறை பணி கிடைத்தும், அந்தப் பணிக்குச் செல்லாமல் அரசியலில் இறங்கினார்.
பின்னர் 1969ஆம் ஆண்டு சம்யுக்த சோஷலிச கட்சி சார்பில், பிகாரில் தனித்தொகுதியில் போட்டியிட்ட பாஸ்வான் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். ஹாஜிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டு முறை மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.