டெல்லியில் அமைதியாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேலாக அறவழியில் நடைபெற்றுவந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேர கட்டுப்பாடு, குறிப்பிட்ட வழியில் மட்டுமே பேரணி நடைபெற வேண்டும் என காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், கட்டுப்பாட்டை மீறி முன்னதாகவே விவசாயிகள் பேரணியை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, அனுமதி வழங்காத பகுதிகளிலும் பேரணி சென்றது. அதுமட்டுமின்றி, டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள், கோபுரத்தில் ஏறி தங்களின் கொடிகளை அத்துமீறி ஏற்றினர். இதனிடையே, சிங்குவில் போராட்ட களத்தில் சோனிபேட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஒரு சில இடங்களில், காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் எனவும் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி டிடியு மார்க் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் பல பகுதிகளில் காவல்துறை வைத்திருந்த தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர்.