கிழக்கு சம்பாரனின் மதுச்சாப்ரா கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் இருக்கும் குழந்தைகள், நெகிழியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரியவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து கிராமத்தில் வசிக்கும் ராம்நாராயான் பான்டே கூறுகையில், "இக்கிராம மக்களுக்கு இப்போது நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவது தவறு என்று புரிகிறது. குழந்தைகள் கிராமம் முழுவதும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்புகின்றனர். இதுகுறித்த பதாகைகளையும் ஆங்காங்கே வைத்துள்ளனர். இது நெகிழிப் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளது" என்றார்.
நெகிழிப் பயன்பாட்டினால்வரும் தீமைகள் குறித்து பதாகைகளில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, நெகிழிக் கழிவுகள் சிதறிக்கிடக்கும் குப்பைத்தொட்டிகளின் அருகே வைக்கின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து குழந்தைகளுக்கு அறிவுரைகளை வழங்கும் ஆசிரியர், கிராம மக்களும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்.
அங்கன்வாடி இயக்குநர் வித்யந்தி தேவி கூறுகையில் "சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் நெகிழிப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது என்று குழந்தைகளுக்குச் சொல்லித்தருகிறோம். குழந்தைகள் அதை அவர்கள் பெற்றோரிடம் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி பள்ளிக்குவரும் பொற்றோர்கள் மத்தியிலும் நெகிழிப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை அரசு தடை செய்துள்ளபோதும், தடையை மீறி மக்கள் பயன்படுத்துவது தொடந்துகொண்டே உள்ளது. மாற்றத்தை முன்னெடுத்துள்ள இந்தக் குழந்தைகளை பின்பற்றி, பெரியவர்களும் புதியதோர் அழகிய உலகை உருவாக்க முயலவேண்டும்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக கிளம்பியுள்ள பிகார்வாசி!