கரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை கடந்த மே 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. பயணநேர அடிப்படையில் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தக் கட்டணம் மூன்று மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என விமானப் போக்குவரத்துத் துறை கடந்த 21ஆம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில், "நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு விமான சேவைகளுக்கான கட்டணம் ஆகஸ்ட் 24க்குப் பிறகு மாறுதல்களுக்கு உள்ளாகலாம். ஆனால், தற்போது, அமலிலுள்ள பயணக்கட்டணம் மூன்றுமாத காலத்திற்கு இருக்கும்" என்று விமான போக்குவரத்துத் துறையின் செயலாளர் பி.எஸ். கரோலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருந்தாலும் கூட, சர்வதேச விமான சேவைகள் முடக்கியே வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு 'வந்தே பாரத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 750 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லைப் பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: விமான படைத் தளபதி நம்பிக்கை