சுற்றுச்சூழல் பிரச்னைகள் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. இத்தகைய சூழலில், பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய பட்ஜெட்டில் ரூ. 4,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் அதை கட்டுப்படுத்தவும், தரமான காற்று கிடைக்கவும் இதன் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வட இந்திய , தென்னிந்திய நகரங்களில் உள்ள காற்றின் தரம் எந்தளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. குளிர்காலத்தில் புகைமூட்டத்துடன் கூடிய காற்று மாசு, மக்களை திணறடிக்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தி, வியூகங்கள் வகுத்து, காற்றுமாசை குறைப்பதுடன், தரமான காற்றை மக்கள் சுவாசிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு எடுத்து வைத்துள்ள முதல் அடி இதுவாகும்.
காற்றின் தரத்தை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் புவி வெப்பமயமாதல் துறை அமைச்சகத்திடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை அளவிடுவதற்காக, இந்த பட்ஜெட்டில் ரூ. 460 கோடி சிறப்பு தொகையாக ஒதுக்கப்படுள்ளது. தேசிய அளவில் தூய்மையான காற்று திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. அதன்படி, தேசிய பசுமை திட்டத்துக்கு ரூ. 311 கோடியும், நாடு முழுவதும் காடு வளர்ப்பு திட்டத்துக்காக ரூ. 246 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விரைவான நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் பெருகுதல் மற்றும் கால நிலை மாற்றத்தால், வனப்பரப்பு நாட்டில் குறைந்துவிட்டது. காட்டுத்தீ ஏற்படுதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. Greenpeace South Asia என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் மட்டும் காற்று மாசு காரணமாக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வரை உயிரிழக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஆண்டுக்கு 9.80 லட்சம் குழந்தைகள் முன் கூட்டியே பிறக்கின்றன என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கார்பன் உமிழ்வு காரணமாக உலகிலேயே மிக அதிக பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். தற்போதைய நிலைமை எவ்வளவு மோசமானது என்பதை இது உணர்த்துகிறது. காற்று மாசு காரணமாக ஏற்படும் இழப்பீடு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதத்துக்கு சமம் ஆகும். நாட்டில் 8 பேரில் ஒருவர் காற்று மாசு காரணமாக இறக்கிறார். தற்போதைய மற்றும் கடந்த கால அரசுகள் பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் போதிய அக்கறை காட்டவில்லை அல்லது அதன் தீவிரத்தன்மையை சரியாக புரிந்துகொள்ளவில்லை. வர்த்தகத்தில் தொழிலில் அரசியலில் நாம் காட்டும் அக்கறையை சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் காட்டவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறோம், இதனால் பாதகமான காலநிலையை கண்டுகொள்ள தவறியுள்ளோம் என்கிற விமர்சனமும் உள்ளது.
தற்போது, பருவநிலை மாற்றம் பரவலாக இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இடியுடன் கூடிய மழை, திடீர் வெள்ளம், பஞ்சம், பருவம் தப்பி மழை பெய்வது என இவையனைத்தும் பருவநிலை மாற்றத்துக்கான சான்று. மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமென்றால் கார்பன் வெளியிடப்படுவது முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வரும் 2021 ஜனவரி 1ஆம் தேதிக்குள் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவற்காக நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கத்துடன் பாரீஸ் ஒப்பந்தத்தின்படி போடப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்த இந்திய அரசு வியூகங்களை வகுத்து முன்னேறி வருகிறது. அதன்படி, கார்பனை வெளியேற்றும் அனல்மின் நிலையங்கள் தற்போதைய தர நிர்ணய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லையென்றால், அதனை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நாட்டில் 70 சதவிகித மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளாண் துறையில் பிரதமரின் குசும் யோஜனா திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் திட்டம் ஊக்குவிக்கப்படும்.
நாடு முழுவதும் 35 லட்சம் சூரிய ஒளியில் இயங்கும் பம்புகள் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளதும் ஒரு நல்ல முடிவாகும். பயனற்ற தரிசு நிலங்களில்,சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பொது விநியோகத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கார்பன் வெளியிடப்படுவதை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதிகரித்து வரும் காற்று மாசுவை தடுக்க நிதி ஆயோக் வகுத்துள்ள விரிவான திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும். காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் எதுவென்ற 180 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது கவலைக்குரியது. மற்றோரு ஆய்வின்படி உலகில் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்படைந்த 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. வாகனங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் காரணமாக ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் மக்களிடையே ஏற்படுகின்றன. ஆண்டுக்கு 3.5 லட்சம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், நுரையீரல் புற்றுநோய், பெரியவர்களை பக்கவாதம் தாக்குவதும் அதிகரித்துள்ளது. காற்று மாசுதான் இதற்கு முக்கிய காரணி ஆகும்.
கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ள புவி வெப்பமயமாதல் காரணமாக நாடுகளிடையே செல்வ சமநிலையும் அதிகரித்துள்ளது. செல்வமிகுந்த நாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வர ,வளர்ந்து வரும் நாடுகள் அல்லது ஏழை நாடுகள் தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளன. கார்பன் வெளியேற்றம், காற்று மாசு, புவி வெப்பமயமாதல் போன்றவை சுற்றுச்சூழலில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
பிரிட்டன், நியுசிலாந்து, கனடா நாடுகள் காலநிலை குறித்து அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன. பிரிட்டனில் 53 சதவிகிதம், நியூசிலாந்தில் 49 சதவிகிதம், கனடாவில் 32 சதவிகித மக்கள் வசிக்கும் பகுதிகள் காற்று மாசு காரணமாக மக்கள் வசிக்கவே முடியாத பகுதிகளாகி விட்டன. இந்த நாடுளைப் போல கார்பன் வெளியிடுவதை தடுக்கவும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கவும் எடுக்கும் முயற்சிகளை உலக நாடுகள் பின்பற்றுவது அவசியம். ஆட்டோமொபைல் துறையில் காற்று மாசு ஏற்படுத்தும் பெட்ரோலிய எரிபொருள்களை தவிர்த்து, சூரிய சக்தி, மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களான ஷாங்காய், பெர்லின், லண்டன், பாரீஸ், மாட்ரிட், சியோல் போன்ற நகரங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்துத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இத்தகைய திட்டத்தால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நகரங்ளில் எடுக்கப்பட்ட முயற்சிகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். மக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர வைத்தால்தான், அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும். அழிந்துவரும் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் தன் பங்களிப்பை வழங்க வேண்டும். அதிகப்படியாக வெளியிடப்படும் கார்பனை குறைக்காவிட்டால், உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு அழிவை சந்திக்கும் அபாயமும் உள்ளது. பூமியில் வசிக்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதனால், இயற்கையையும் சுற்றுப்புறத்தயும் பாதுகாப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து மக்களும் அரசுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் மட்டுமே சுற்றுப்புறச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா பசுமை இந்தியாவாக மாற முடியும்.