கரோனா வைரஸ் நோய் பனிப்போர் தொடுத்து முழு உலகத்தையும் சுனாமிபோல் விழுங்கியுள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவிவருவதால், ஊரடங்கை பிறப்பிக்க மருத்துவர்கள் அந்நாட்டு அதிபர் ட்ரம்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். முழு ஊரடங்கு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறி ட்ரம்ப் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை பிறப்பித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிப்படைய 67 நாள்கள் ஆனது. அடுத்த ஒரு லட்சம் பேர் பாதிப்படைய 11 நாள்கள் ஆனது. அடுத்த நான்கே நாள்களில் மற்றொரு லட்சம் பேர் பாதிப்படைந்தனர். கரோனா எந்தளவுக்கு வேகமாக பரவும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இந்தியாவில் முதல் 50 நபர் கரோனாவால் பாதிப்படைய 40 நாள்கள் ஆனது. அடுத்த ஐந்தே நாள்களில் மேலும் 50 பேர் பாதிப்படைந்தனர். ஐந்து நாள்களில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது தொற்று எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை எடுத்துரைக்கிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு கரோனாவை வீழ்த்துவதற்கான திடமான முடிவு. 14 நாள்களில் கரோனாவுக்கான அறிகுறிகள் தென்படும். குடும்பத்தினரிடையே கரோனா பரவ வாய்ப்புள்ளதால், நோயாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும். அதே சமயத்தில், மற்றவர்களிடமிருந்து கரோனா பரவுவதை தடுக்க முடியும். கடந்த காலத்தில் உலகையே அச்சுறுத்திய சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை இந்தியா முழுவதுமாக ஒழித்துள்ளது.
எனவே, கரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் இந்தியா முன்னணியில் நிற்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் காலம்காலமாக எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு 9 லட்சம் கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிர்களை காப்பாற்ற ஊரடங்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எடுத்துரைத்துள்ளது. மார்ச் 15ஆம் தேதி வரை 100 பேர் மட்டுமே கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். அடுத்த 15 நாள்களில் அது ஒன்பது மடங்கு உயர்ந்தது.
நோயாளிகளின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டால் கரோனாவின் தாக்கம் 69 விழுக்காடு குறையும். இதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க முடியும். அறிகுறிகள் இல்லாமலேயே 75 விழுக்காடு கரோனா பாதித்தவர்களை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தொற்றாக மாறாமல் தடுக்க உதவும். அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு நேர்ந்த அனுபவங்கள் மூலம் கரோனாவை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பது தெரியவருகிறது.
நோய் கண்டறியும் மையங்கள் தொழில்நுட்ப உதவியை வைத்து தென் கொரியாவில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் தேவாலயத்திற்கு நோயாளி ஒருவர் சென்றதால் கரோனா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவியது. இதுபோன்ற கொடூரமான நோயை பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றியமையாதது. 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தென் கொரியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில், குடிமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும்.
கரோனா குறித்த உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல, இதனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு அமல்படுத்திய ஊரடங்கால் 30 விழுக்காடு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். குடிமக்களுக்கு உதவும் நோக்கில் அனைத்து விதமான நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்க வேண்டும். கிலோ 37 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசி 80 கோடி மக்களுக்கு மூன்று ரூபாய்க்கு வழங்க வேண்டும். 130 கோடி பேர் வீட்டிற்குள் அடைபட்டுள்ளதால், அவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். கரோனாவால் ஏற்படும் பிரச்னை போருக்கு அரசு மக்களை தயார் படுத்த வேண்டும்.