குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவிவகித்த ரஞ்சன் கோகாய் கடந்த நவம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த நான்கு மாதத்திற்குள் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகாய், தான் நாளை டெல்லி செல்லவுள்ளதாகவும், பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு இதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவிப்பேன் எனக் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகளும், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்படுவது மிக அவசியம் எனத் தெரிவித்த கோகாய் அதற்கான பாலமாக தான் விளங்குவேன் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவிவகித்தபோது அயோத்தி ராமர் கோயில் வழக்கு, ரபேல் ஊழல் புகார் வழக்கு, சிபிஐ உள்மோதல் விவகாரம் ஆகிய முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். இவர் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதையும் படிங்க: கொரோனா சார்க் ஆலோசனைக் கூட்டம் ஒரு புதுவித ராஜதந்திரம் - அமித் ஷா