தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள மைலர்தேவ்பள்ளி சாலையில் சிறுத்தை ஒன்று, ஹாயாக தூங்கி கொண்டிருந்தது. இதைப் பார்த்த மக்கள் அச்சமின்றி செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த வனத்துறை அலுவலர்கள், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுத்தை அவர்களில் ஒருவரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து சிறுத்தை பல இடங்களில் பயணித்த காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது, அச்சிறுத்தை தனியாருக்குச் சொந்தமான 60 ஏக்கர் பண்ணைக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியது. வன அலுவலர்கள் ட்ரோன் கேமரா அனுப்பி சிறுத்தையைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. அங்கு ஏராளமான பகுதிகளில் சிறுத்தை மறைந்துகொள்ள வாய்ப்புள்ள காரணத்தினால், 20க்கும் மேற்பட்ட பொறிகளை வைத்து கேமராவில் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை ஆணையர் அசோக் சக்கரவர்த்தி கூறுகையில், "சிறுத்தையைத் தேடும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேமராவில் சிறுத்தை தென்பட்டால் உடனடியாகப் பிடிப்பதற்கு தயாராக வனத்துறை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் சாலையில் உலாவரும் சிறுத்தை: பொதுமக்கள் கிலி!