குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் வடகிழக்கு பகுதியில் நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதில், 53 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கலவரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் ஒலித்தன.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் டெல்லி கலவரம் தொடர்பாகக் காரசார விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுக்க, அமித் ஷா ஆக்ரோஷமாகவும் கோபத்துடனும் பதிலளித்து வருகிறார்.
கலவரத்தை தூண்டியது எதிர்க்கட்சிகள் என குற்றஞ்சாட்டிய அவர், அப்பாவி மக்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும், 49 ஆயுதச் சட்டங்கள் பதியப்பட்டு 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மிகக் குறுகிய காலத்தில் இத்தனை பெரிய கலவரம் நடக்க சதித்திட்டமே காரணம் என்று கூறியுள்ள அவர், கலவரத்தை ஏற்படுத்த பண உதவி செய்த மூன்று நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது டெல்லி கலவரம் குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல் துறை சில தகவல்களைக் கூறியுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள டெல்லி காவல் உயர் அலுவலர் எம்.எஸ். ரந்தாவா, “டெல்லி வடகிழக்கு பகுதி அமைதி நிலைக்குத் திரும்பியுள்ளது. காவல் துறையின் உயர் அலுவலர்கள் அனைவரும் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
721 முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு, 200 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது எடுக்கப்பட்ட காணொலிகளின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்தல்