மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சித் தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய ஆயுஷ் துறை நடத்திய மெய்நிகர் பயிற்சியில் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோடெச்சா, ‘எனக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வராது. எனவே ஆங்கிலத்தில் பாடம் எடுக்க முடியாது. இந்தி பேச தெரியாதவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறலாம்’ எனக் கூறியுள்ளார்.
ஆங்கிலம் பேசக்கூடாது என்ற விதியுள்ளதா? அல்லது கட்டாயமாக அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என விதி உள்ளதா?
இந்திய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் சம மரியாதை உண்டு. அதற்குரிய கண்ணியம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும்.
இந்தி பேசத் தெரியாது என்ற காரணங்களுக்காகப் பயிற்சித் திட்டத்திலிருந்து விலகுவது அரசியலமைப்பு விதிமீறல் அல்லவா? இது அரசியலமைப்புக்கு எதிரானது தானே ?
இந்தி பேசாத/ தெரியாத காரணத்திற்காக கன்னடர்கள் உள்பட அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பீர்களா?
அமைச்சகம் நடத்திய மெய்நிகர் பயிற்சி நிகழ்வின்போது "இந்தி திணிப்பு" சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சக குடிமக்களை மொழியின் அடிப்படையில் பாகுபாடாக நடத்திய துறைசார் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.