பிகார் அரசியலில் எதிரெதிர் நிலைகளில் ஆர்.ஜே.டி., ஜே.டி.யூ. ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது கூட்டணியில் நிற்கின்றன. நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டும் கட்சிகளும் இரண்டு கூட்டணிகளின் தலைமையாக இருக்கின்றன. இரண்டு கட்சியின் ஒருவரை மற்றொருவர் தாக்கி அறிக்கை போரில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி (ஆர்.ஜே.டி.) நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இன்று (அக்டோபர் 22) தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரமும், கருத்தும் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
லாலு வெளியிட்டிருந்த பதிவில், "பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி ஆகிய இருவரும் தலைமை சந்தர்ப்பவாதிகள். பிகார் மக்கள் உங்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கினர். ஆனால், நீங்கள் அவர்களை ஏமாற்றினீர்கள்.
இப்போது, மீண்டும் பிகார் வாக்காளர்களிடம் தங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கேட்கிறீர்கள். இன்னும் எத்தனை வாய்ப்புகள் உங்களுக்குத் தேவைப்படுகிறது?
நிதீஷ் குமார் ஓய்வுபெற வேண்டும். அவர் போதுமான அளவு உழைத்ததால் அந்த முடிவை எடுக்க வேண்டும்" எனக் காட்டமாக கூறியுள்ளார்.
2017ஆம் ஆண்டில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்துகொண்டே பிகார் அரசியலை அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை உன்னிப்பாக கண்காணித்து, அவரது ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியை இயக்கிவருகிறார்.