கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், ஜூன் 15 அன்று சீனப் படையினருடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் ஒரு கர்னல் உள்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான அதிர்வலை நாடு முழுவதும் ஏற்பட்டது. சீன தயாரிப்பை, நாட்டு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவில் சீனாவின் முதலீடு அதிகளவில் இருப்பதாக கூறி, அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலர், தங்களது சீருடைகளை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொல்கத்தா மாநிலம் பெஹாலாவில் நடந்த போராட்டத்தின்போது, “கணிசமான சீன முதலீடு இருப்பதால் தாங்கள் சொமேட்டோ நிறுவனத்தின் வேலையை விட்டு விலகியுள்ளோம். நிறுவனம் வழியாக உணவு ஆர்டர் செய்வதை பொதுமக்கள் நிறுத்தவேண்டும் . நாங்கள் பட்டினி கிடக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் சீனாவிடம் முதலீடு செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யமாட்டோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
2018ஆம் ஆண்டில், சீனாவின் முன்னணி நிறுவனமான, அலிபாபா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆண்ட் பைனான்சியல், சொமேட்டோவில் 14.0 விழுக்காடு பங்குகளுக்கு, அதாவது 210 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது. தற்போது கூடுதலாக 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மே மாதத்தில், சொமேட்டோ நிறுவனம் 13 விழுக்காடு பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.