லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இந்த மோதலை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உயர்மட்ட அளவில் தொடர் பேச்சுவார்த்தை நடந்துவந்த சூழலில், கடந்த திங்கட்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
சுமார் ஆறு, ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த மோதலையடுத்து கல்வான் நதியில் சீனா பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தற்போது தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
'பிளானெட் லேப்ஸ்' என்ற நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுத்த புகைப்படங்களின் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்காசிய அரசியல் விவகாரங்களுக்கான நிபுணர் ஜெஃப்ரி லூயில் கூறுகையில், "கல்வான் பள்ளத்தாக்கில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இது கல்வான் நதியில் பாலம் கட்டும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.
இருதரப்பினரும் கல்வான் பள்ளத்தாக்கில் கனரக வாகனங்களைக் குவித்துள்ளன. இந்தியத் தரப்பில் 40 வாகனங்களும், சீனத் தரப்பில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் நிற்கின்றன" என்றார்.
இதையும் படிங்க : 14ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு!