தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவர், தனது ஏழு வயது மகள் கோமளாவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி கோமளா உயிரிழந்தார். கையில் பணமில்லாததால், மருத்துவமனையின் சார்பில் மகளின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அமரர் ஊர்தி வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என சம்பத் கோரிக்கைவிடுத்தார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்த மருத்துவமனைக்கென தனியாக அமரர் ஊர்தி வசதி எதுவும் இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த அவர் சுமார் இரண்டு மணிநேரம் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்தார்.
மருத்துவமனை நிர்வாகமோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களோ தங்களால் இயன்ற சிறு உதவி கூட செய்யாத நிலையில் தனது மகளின் சடலத்தை கண்ணீருடன் கையில் ஏந்தியபடி மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் நிராகரித்த நிலையில், ஒருவர் மட்டும் சடலத்தை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல சம்மதித்தார்.
தெலங்கானா மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே அரசு மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வசதி இல்லாமல், உயிரிழந்த தனது மகளை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்காக தந்தை கண்ணீர் மல்க அனைவரிடமும் கெஞ்சிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெலங்கானாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில், மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் அஜய்குமார், 104,108 மருத்துவ வாகன சேவை அலுவலர் அனிதா கிரேஸ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மாவட்ட மருத்துவமனையில் அமரர் ஊர்தி பழுதடைந்துள்ளதா அல்லது எரிபொருட்கள் நிரப்பப்படாமல் உள்ளதா என்பதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அனிதா கிரேஸ் கூறியுள்ளார்.