கடந்த 15 நாட்களுக்கும் மேலாகவே கர்நாடக மாநிலம் உச்சகட்ட அரசியல் பரபரப்பில் உள்ளது. அங்கு நடைபெற்றுவரும் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் திடீரென்று ராஜினாமா செய்தனர்.
இவர்களின் ராஜினாமா சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பா தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சியான பாஜக அழுத்தம் கொடுத்துவருகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவைக்கு வருமாறு முதலமைச்சர் குமாரசாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரம் கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியிருந்தது. இருப்பினும், சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் யுக்தியில் சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தாமல் விவாதத்துடன் அவையை ஒத்திவைத்தார்.
கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா வாக்கெடுப்பு நடத்த கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்தபோதிலும் சபாநாயகர் அதற்கு செவிமடுப்பதாய் இல்லை.
சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது ஐந்து எதிர்ப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களாவது மும்பையிலிருந்து திரும்பிவந்து ஆதரவு அளித்தால் அரசு எப்படியாவது தப்பிவிடும். இல்லையேல் ஆட்சி கவிழ்ந்துவிடும் அபாயத்தில் உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவையும் இன்று விசாரணைக்கு வருகிறது.