கர்நாடக மாநில அரசியல் களம் கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது, எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றது, தற்போது முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் அம்மாநிலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அவரை விடுவிக்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களுக்கிடையே பொது சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அந்த வகையில் பேருந்து எரிப்பு கலாசாரம் சமீப காலமாக கர்நாடக மாநிலத்தில் தலைதூக்கியுள்ளது.
இந்த நிலையில், போராட்டங்களின் போது மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்து எரிப்பது, கல்வீச்சு உள்ளிட்டவை மூலம் 20 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அரசுப் பேருந்துகளை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
இதையடுத்து, கலவரத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட பேருந்து ஒன்றை கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தியுள்ளது. அந்த பேருந்தைச் சுற்றியும் விளம்பர பேனர்கள் கட்டப்பட்டுள்ளன. அதில், நான் எனது பணியை சிறப்பாக செய்யவில்லையா?, என்னை சேதப்படுவதில் என்ன ஆனந்தம் இருக்கிறது, என்னைப் பாதுகாக்கத் தவறுவது ஏன் உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்தின் இந்த நூதன முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொது சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் இது நம்முடைய வரிப்பணத்தில் வாங்கப்பட்டது என்பதை உணர்ந்து இது போன்ற கொடிய செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.