நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு முகக்கவசங்களை அணியவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, முகக் கவசங்கள் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
இந்நிலையில், சிலர் தாங்கள் உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப முகக் கவசங்களை அணிய விரும்புவதால், அலங்கரிக்கப்பட்ட முகக் கவசங்களுக்கு நல்ல சந்தை மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் நகைக்கடை ஒன்றினை நடத்திவரும் ரிஷப் ஜெயின், வெள்ளியிலான முகக் கவசம் ஒன்றினை தயாரித்துள்ளார். ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால், இழந்த பொருளாதாரத்தை மீட்க எண்ணிய அவர் மக்களைக் கவரும் வண்ணம் இந்த முகக் கவசத்தை தயாரித்துள்ளார்.
இந்த முகக்கவசம், என்-95 ரக முகக்கவசத்திற்கு ஈடாக மக்களைப் பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தினமும் அணியப்படும் என்-95 ரக முகக்கவசத்தின் விலை குறைந்தது 200 ரூபாயாக இருக்கக்கூடும். இதனைப் பராமரிப்பதும் சற்று கடினமாகவே இருக்கும்.
ஆனால், 85 கிராம் வெள்ளியிலான முகக்கவசம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே. இது பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல அமையும். இதை அணிவதற்கு எவ்வித சிரமங்களும் இருக்காது எனக் கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் இருக்கும் காலகட்டம் வரை மட்டுமே மக்கள் முகக் கவசங்களை அணிவார்கள். அவர்கள் விரும்பினால்,முகக் கவசங்களை மீண்டும் பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளியிலான முகக் கவசங்களுக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இதுவரை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து 125 ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அவற்றை வரும் நவம்பர் மாதத்திற்குள் அவர்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.