கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு, பார்க் சர்க்கஸ் பகுதியிலுள்ள மா ஃப்ளைஓவரில் அதிவேகமாக வந்த பைக் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவரில் மோதியது.
பைக்கை ஓட்டிவந்தவர் மோதிய வேகத்தில் தூக்கிவீசப்பட்டு 40அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னே அமர்ந்த மற்றொருவர் பாலத்தின் மேலே சாலையில் விழுந்து காயமுற்றார்.
கீழே விழுந்த நபரை பொதுமக்கள் அருகிலுள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், பைக்கை ஓட்டிவந்தவர் பெயர் உத்தம் கோசல் எனவும், 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் எனவும் தெரிவித்தனர்.
பின்னே அமர்ந்துவந்தவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.