டெல்லி: ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதை அடுத்து, அதன் வழிகாட்டுதலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், “ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களைச் சேர்ந்த குடிபெயர் தொழிலாளர்கள் தான் 80 விழுக்காடு அளவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் மாநிலத்திற்குள் ரயில்களை இயக்கவும் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா – தமிழ்நாடு, கேரளா – ஒடிசா, ஆந்திரா – அஸ்ஸாம் இடையே ரயில்கள் இயக்கப்படும். மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால் ரயில்கள் இயக்கப்படும்.
ரயில்களுக்கான முன்பதிவு கால அவகாசம் 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் தகுந்த இடைவெளி மற்றும் அதீத சுகாதாரம் கடைபிடிக்கப்படும். உடனடியாக உண்ணும் உணவு வகைகள் மட்டுமே ரயில்களில் வழங்கப்படும்.
ஜூன் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை தொடங்க உள்ளது. முதல்கட்டமாக 200 விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏ.சி. பெட்டிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
தற்போது இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
- செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை தொடர்பான வழிகாட்டுதல்கள் பயணக் கட்டணங்களுடன் வழங்கப்படும்.
- ஆரோக்யா சேது செயலியை அனைத்துப் பயணிகளும் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
- கரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ரயில் நிலையங்களிலும், ரயில்களுக்குள்ளும் வழங்கப்பட வேண்டும்.
- ரயில் நிலையங்களில் கரோனா வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
- பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அனைத்து வகையான சுகாதார நடவடிக்கைகளையும் பயணிகள் பின்பற்ற வேண்டும்.
- ரயில் நிலையங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தகுந்த இடைவெளியை பயணிகள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- ரயில் நிலையங்களை முறையாக கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்திட வேண்டும். அங்கு கிருமி நாசினிகள், சோப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பயணம் முடிந்து பயணிகள் வெளியேறும் இடங்களிலும் கரோனா வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- பயணம் முடிந்து வெளியேறும் போது, அறிகுறிகள் இல்லாத பயணிகள், தங்களது உடல்நலத்தை அடுத்த 14 நாட்களுக்கு தாங்களாகவே பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.
- கரோனா அறிகுறி தென்பட்டும் நபரை தனிமைப்படுத்தி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.