கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகாவிற்குட்பட்ட கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம்மா-வெங்கடேஷ் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் ரேகா. இவரது தந்தை இறந்துவிட்டதால், இவரது மாமா வீட்டில் வசித்துவந்துள்ளனர். ரேகா பத்தாம் வகுப்பில் 74 விழுக்காடு பெற்றிருந்தார். இவருக்கு வழக்கறிஞருக்கு படித்து, பின்னர் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே கனவு.
அப்போது ரேகாவிற்கு வலுக்கட்டாயமாக குழந்தைத் திருமணம் செய்ய வீட்டில் முடிவு செய்தனர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ரேகா படிப்பைத் தொடர முடிவு செய்து வீட்டை விட்டு பெங்களூருவுக்கு வந்துவிட்டார்.
அப்படியே அவர் கணினி பயிற்சியும் படித்தார். ஆனால், அவருக்கு பணப்பிரச்னை ஏற்படவே குழந்தைகள் நல அமைப்பிற்குத் தொடர்புகொண்டு, உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த அமைப்பு அவரை மதிகெரேவில் உள்ள ஸ்பர்சா அறக்கட்டளையில் சேர்த்துவிட்டனர். அதேவேளையில், நீலமங்களா கோஹாலி அருகில் உள்ள ஸ்ரீ பைலஞ்சுநேய பியூ கல்லுாரியில் சேர்ந்து படித்தார்.
ரேகா தனது கடின முயற்சியால் தற்போது பியூசி இரண்டாம் ஆண்டில் 90.3 விழுக்காடு பெற்று சாதனை படைத்துள்ளார். பி.ஏ. இளங்கலை படிப்பில் வரலாற்றுப் பாடத்தை எடுத்து படிக்கவுள்ளார். தொடர்ந்து தனது ஐஏஎஸ் கனவை நனவாக்கவுள்ளார். சிறுவயதிலேயே குழந்தைத் திருமணத்தை எதிர்த்து, தனது கனவை நனவாக்கத் துடிக்கும் இந்த மாணவிக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.