உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரைச் சாலையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகளவில் கூடினர். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவல் துறையின்ர் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காந்தி சிலை அருகே உள்ள அரசு உணவகத்தின் மாடி மேலிருந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொதுமக்களும் ஆரவாரமாகப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஏராளமான உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாட்டவர் வரை பலர் கலந்துகொண்டு புத்தாண்டை கொண்டாடினர். இதனிடையே, புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு சுற்றுலாப் பயணி, திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட காவல் துறையினர், உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தி வந்தனர். அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ் சென்றால் கைது - மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை