கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் குடசநாடு பகுதியைச் சேர்ந்தவர் ரெஜனி (38). இவருக்கு மார்பக பகுதியில் கட்டி ஏற்பட்டதையடுத்து கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் ரெஜனிக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து அருகில் இருந்த தனியார் பரிசோதனை நிலையத்தில் அளித்துள்ளனர்.
ரெஜனியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த ஆய்வக ஊழியர்கள் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையில் அடிப்படையில் ரெஜனிக்கு புற்றுநோய் பாதிப்புகளுக்கு தரப்படும் கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. முதல்முறை சிகிச்சையின்போதே ரெஜனி தனது தலைமுடி முழுவதுமாக இழந்தார்.
இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவரின் ரத்த மாதிரிகளை மீண்டும் இரண்டு முறை பரிசோதனை செய்தனர். இரண்டு பரிசோதனைகளிலும் ரெஜனிக்கு புற்றுநோய் பாதிப்பில்லாதது உறுதியானது. பின்னர் இந்த விவகாரம் கேரளாவில் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து உரிய அறிக்கை அளிக்கும்படி, கோட்டயம் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தை மூடி மறைக்க அந்த தனியார் பரிசோதனை மையம் முயற்சித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ரெஜனி புகார் தெரிவித்துள்ளார்.
மக்களை காக்க வேண்டிய மருத்துவத் துறையில் இதுபோன்ற அலட்சியமான செயல்பாட்டால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களால் பலருக்கும் மருத்துவத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.