புகைப்படங்களை நினைவுகளைச் சேமிக்கும் கருவி என்றே சொல்லலாம். அதிலும் திருமண நாளில் எடுக்கும் புகைப்படங்கள் அந்தத் தம்பதி மட்டுமில்லாமல் அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கதைச் சொல்லியாகத் திகழும். அந்தத் தம்பதியின் தூரத்து சொந்தம் தொடங்கி நண்பர்கள்வரை அனைவரையும் அந்தத் திருமணப் புகைப்படத் தொகுப்பு அடையாளம் காட்டும்.
ஆனால், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சுட்டி (85) - சின்னம்மா (80) தம்பதிக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இவர்கள் கடந்த 1962ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களால் அப்போது திருமணப் புகைப்படத்தை எடுக்கமுடியவில்லை. இன்றளவும் திருமணப் புகைப்படம் எடுப்பது இத்தம்பதிக்கு கனவாகவே இருந்தது. இந்நிலையில், கரோனா பேரிடருக்கு நடுவில் இவர்களுக்கு 'வெட்டிங் போட்டோஷூட்' நடத்தப்பட்டது.
எப்படி?
திருமணமாகி 58 ஆண்டுகள் கடந்த பின்னும்கூட தனது தாத்தா, பாட்டிக்கு திருமணப் புகைப்படங்கள் எடுக்கமுடியாதது ஆறா வடுவாக இருப்பதை உணர்ந்த பேரன் ஜிபின் இந்த வெட்டிங் போட்டோஷூட்டுக்கு அடிகோலினார்.
சமீபத்தில் 'சேவ் தி டேட்' என்ற போட்டோஷூட் குறித்து அறிந்த இத்தம்பதியினர் அது குறித்து தங்கள் பேரனிடம் பகிர்ந்துள்ளனர். ஜிபின் ஏற்கனவே புகைப்படத் துறையில் அனுபவம் உள்ளவராக இருந்தது குஞ்சுட்டிக்கும், சின்னம்மாவுக்கும் தங்களின் கனவை நோக்கி பயணிக்க உதவியாக இருந்துள்ளது.
தன்னுடைய தாத்தா- பாட்டியின் வெட்டிங் போட்டோஷூட்டுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் ஜிபினே செய்து முடித்தார். இருவரும் திருமண உடைகளை அணிந்துகொண்டு முகப்பொலிவுடன் கேமரா முன் நிற்கும் காட்சி காண்போர் மனதைக் கொள்ளையடிக்கிறது.
குஞ்சுட்டி கோட்-சூட், கூலிங்கிளாஸ் சகிதம் கதாநாயகனைப் போல சின்னம்மாவின் அருகில் நிற்கிறார். சின்னம்மா தனது திருமண ஆடையுடன் தேவதையைப் போல குஞ்சுட்டியின் அருகிலிருந்து புன்னகைக்கிறார். இந்த வெட்டிங் ஷூட் மூலம் 58 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்த இத்தம்பதியின் பெருங்கனவு நிறைவேறிவிட்டது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குஞ்சுட்டி- சின்னம்மா தம்பதிக்கு 3 பிள்ளைகளும், 6 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்த போட்டோஷூட் குறித்து இத்தம்பதியினரிடம் பலரும் கேட்ட நிலையில், 'மகிழ்ச்சி' என எளிமையாகப் பதிலளித்துள்ளனர்.