இந்தியாவிலேயெ முதன்முதலாக கேரள மாநிலத்தில்தான் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது, என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், அம்மாநில சுகாதாரத் துறை துரித நடவடிக்கைகளைக் கையாண்டு, பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்து உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டையும் பெற்றது.
இச்சூழலில், சமீப நாள்களாக கேராளாவில் தொற்று எண்ணிக்கை திடீரென்று உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் (ஜூலை 16) 722 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மேலும், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் மீண்டும் கரோனா தலைதூக்கியிருப்பதால், பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பினரயி விஜயன் அறிவித்தார். குறிப்பாக, கடலோரப் பகுதிகள் முழுவதிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றார்.
கடலோரப் பகுதிகளான பூனதுரா, புலவிலா உள்ளிட்ட இடங்களில் கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டார். மீண்டும் நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள மாநிலத்தைக் கரோனாவிலிருந்து காப்பாற்ற மாநில அரசு மிக முக்கிய முடிவு ஒன்றைக் கையிலெடுத்துள்ளது.
’கிளஸ்டர் கேர்’ முறையைச் செயல்படுத்துவதே அது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் மிக அதிகளவில் தொற்று கண்டறியப்பட்டால் அப்பகுதி கரோனா கிளஸ்டர் என்றழைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கோயம்பேடு மார்க்கெட் கிளஸ்டர், மகாராஷ்டிரா கிளஸ்டர்(மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாடு திரும்பியவர்களால் ஏற்பட்ட தொற்று) உள்ளிட்டவற்றைச் சொல்லலாம். இவ்வாறான கிளஸ்டர்களைக் கட்டுப்படுத்திவிட்டாலே கரோனாவை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
அதைத்தான் தற்போது கேரள அரசு செயல்படுத்தவுள்ளது. அப்பகுதிகள் கூடுதல் கவனம் செலுத்தி, கரோனா தொற்று சங்கிலித் தொடரை உடைப்பதே இம்முறையின் பிரதான நோக்கமாகும். கிளஸ்டர் பகுதிகளில் பரிசோதனை, தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தல், தொற்றின் வழியைக் கண்டறிதல் ஆகியவற்றைப் பலப்படுத்தி கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலாஜா கூறியுள்ளார்.
சமூகப் பரவல் ஏற்படுவதற்கு முந்தைய நிலையே கிளஸ்டர் என்பதால், மிகக் கவனத்துடன் கிளஸ்டர் பகுதிகளைக் கையாள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் மொத்தம் 87 கிளஸ்டர்கள் இருப்பதாகவும், அவற்றில் 70 கிளஸ்டர்களிலிருந்துதான் தற்போது அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிளஸ்டர்களைக் கண்டுபிடித்து, அப்பகுதியை முழுவதுமாகத் தடைசெய்வதன் மூலம், ஒரு கிளஸ்டரிலிருந்து மற்றொரு கிளஸ்டருக்கு தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும் குழு ஒன்று உருவாக்கப்படும் என்று கூறிய அவர், பொதுமக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசு இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், கேரள முதலமைச்சரோ மாநிலத்தின் சில இடங்களில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று யாரிடமிருந்து யாருக்குப் பரவுகிறது என்று கண்டறியப்பட முடியாவிட்டால், அது சமூகப் பரவலாகக் கருத்தப்படும் என உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அந்த வகையில் பார்த்தோமானால், ஜூலை 16ஆம் தேதி 722 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதில், 34 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது, எங்கே இருந்து பரவியது என்று கண்டறியப்படவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் தற்போதைய நிலவரப்படி, 11 ஆயிரத்து 659 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 199 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், 6 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 1 மில்லியன் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று!