ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், வேட்டையாடுதல், சிறைபிடிக்கப்பட்ட சித்திரவதை, வாழ்விட இழப்பு, மனித-விலங்கு மோதல் போன்றவை குறித்து பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
இந்நிலையில், கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் எம்.எம்.ஜோசப், யானைகள் மீதான தனது அன்பை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான செயலை செய்துவருகிறார்.
இவர் கடந்த 35 ஆண்டுகளாக, யானைகள் தொடர்பான தினசரி செய்தித் தாள்கள், பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு செய்திகளையும் சேகரித்து வருகிறார். தற்போது மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கிளிப்பிங் மடிப்பு ஆல்பங்களாக சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு கிளிப்பிங்கிலும் வெளியீட்டு தேதிகள் கூட கவனமாகக் குறிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜோசப் கூறும்போது, தனது யானை ஆல்பம் வகுப்பறைகளில் ஓர் ஆய்வுப் பொருளாகப் பயன்படுத்த உதவுகிறது என்றும், இந்த ஆல்பத்தை மாணவர்கள் பார்க்க கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருவதாகவும் தெரிவித்தார்.
கற்பித்தல், யானை குறித்த செய்திகளை பட்டியலிடுதல் தவிர ஜோசப் ஒரு கைப்பாவை கலைஞரும் கூட. இவர், தினவிக்ஜனகோஷம், அரண்முலா பைத்ருகம், நிலம்பூரிண்டே பிரதேசிகா சரித்திரம் போன்ற பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.