கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாட்கள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு மத்தியில், மாநிலம் முழுவதும் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்துகளை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்க கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து காவல்துறை மூத்த அலுவலர் லோக்நாத் பெஹ்ரா கூறுகையில், “மருந்து தேவைப்படுபவர்கள் 112 என்ற இலவச எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். இந்த மருந்துகள் எங்கள் காவல்துறையினரால் வாங்கப்பட்டு வீட்டு வாசலிலேயே கொண்டு வழங்கப்படும்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திலோ அல்லது கொச்சி மத்திய காவல் நிலையத்திலோ கொடுக்கப்படுகிறது. பின்னர் இது கேரளாவில் எந்தப் பகுதியில் உள்ள நபர்களுக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு காவல்துறையினரால் கொண்டு வழங்கப்படும்” என்றார்.
கோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முழு அடைப்பில் உள்ள இந்த சூழ்நிலையில் மருந்தாளுநர்கள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் இந்த வசதியைப் பெறலாம். தேவையான மருந்துகளைப் பெறுவதற்கு, பொது மக்கள் மருத்துவர் வழங்கிய சீட்டை காவல்துறையினரிடம் சமர்ப்பித்து பெற்று கொள்ள வேண்டும்.
மருந்து, மருந்தின் பெயர், அளவு மற்றும் மருந்து தேவைப்படும் நோயாளியின் நோய் ஆகியவற்றை உள்ளடக்கிய மருந்து சீட்டை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட அளவில், காவலர்களின் உதவியுடன் இந்த உயிர் காக்கும் மருந்துகளை சேகரித்து வழங்குவது மாவட்ட காவல்துறைத் தலைவர்களின் பொறுப்பாகும்.
மாநிலம் முழுவதும் மருந்துகளை வீட்டிற்கே வழங்க திருவனந்தபுரம் மற்றும் கொச்சி மையங்களிலிருந்து கொண்டு செல்வதற்காக சிறப்பு வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களும், இதற்காக பயன்படுத்தப்படும். இந்த செயல்முறை தென் மண்டல காவல் ஆய்வாளர் ஹர்ஷிதா அட்டலூரி மேற்பார்வையில், திருவனந்தபுரம் கிராம மாவட்ட காவல்துறைத் தலைவரும், கொச்சி நகர துணை போலீஸ் ஆணையரும் தலைமை வகித்து நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் சாராயம் காய்ச்சிய ஏழு இளைஞர்கள் கைது!