மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்லலாம் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, சில பெண்கள் கோயிலுக்குச் செல்ல முற்பட்டார்கள். ஆனால், சிலர் அதனை தடுத்து நிறுத்தியதால் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின.
இந்நிலையில், சபரிமலை கோயிலுக்குச் செல்ல முற்பட்ட பம்பையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்குச் சென்றதாகவும், கோயில் வாயிலில் நின்று கொண்டிருந்த காவல் துறையினர் சிறுமியை தடுத்து நிறுத்தி வயது குறித்த சான்றிதழை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுமிக்கு 12 வயது என தெரிந்தவுடன் 10 வயது முதல் 50 வயது பெண்களை அனுமதிக்க வேண்டாம் என அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார். தீவிர சோதனைக்கு பிறகே பெண்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுபான்மை தீவிரவாதத்தை விமர்சித்த மம்தா!