திருவனந்தபுரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியும், பினராயி விஜயனும் மக்களை இன ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
கேரளாவில் மூன்று கட்டங்களாக (டிச.8,10,14) 1199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
இதுதொடர்பாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சியினரின் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், முதலமைச்சர் பினராயி விஜயனும் மக்களை இன ரீதியாக பிரிக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “கேரளத்தில் பாஜகவை எதிர்க்கட்சியாக கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உழைக்கிறது. இந்தத் தந்திர அரசியல் சபரிமலை போராட்டத்தின்போதே தொடங்கிவிட்டது. மாநில முதலமைச்சர் மதங்களுக்கு இடையே பிரிவினையை தூண்டி இன ரீதியாக பிரித்து தன்னை ஒரு பாதுகாவலராக காட்ட முயல்கிறார்.
தற்போதைய அரசியல் நிலைமை உள்ளாட்சி தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றியை கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது நிரந்தரமல்ல. நாங்கள் விரைவில் மீண்டுவருவோம். எங்களது தவறுகளை திருத்திக் கொள்வோம். சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தவறான பரப்புரையை மேற்கொள்கின்றன.
எங்களது கூட்டணியிலிருந்து எந்தவொரு கட்சியும் வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜோஸ் கே மாணி (கேஎம் மாணி மகன்- கேரள காங்கிரஸ்) இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்ததால் அவருக்கு எவ்வித லாபமும் கிடைக்கவில்லை.
தவறான பரப்புரை மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியை பலவீனப்படுத்தி, பாஜகவை வளர செய்யும் அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கையில் எடுத்துள்ளது. நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன் பாஜகவால் கேரளத்தில் வெற்றியை பெறமுடியாது.
மேலும், எங்களது கூட்டணியில் பினராயி விஜயன் தலையிடக் கூடாது. அவர் மக்களை மத ரீதியாக பிரிக்கும் செயலிலும் ஈடுபடுகிறார். அதன் மூலம் பலனடையலாம் என நினைக்கிறார். இதனை அவர் கைவிட வேண்டும்.
இதெற்கெல்லாம் அவரது பேஸ்புக் பதிவே சமீபத்திய உதாரணம். அவரின் மத ரீதியிலான அரசியலை மக்கள் ஒருநாள் உணர்வார்கள். மத ரீதியிலான வெறுப்புணர்வு பரப்புரையை முன்னெடுத்து தன்னை பாதுகாவலராக காட்ட அவர் முயல்கிறார். இது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.
கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்டுப்பாடுகளை மதித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசு இயந்திரங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் என்பதாலும், வேட்பாளர்கள் தங்களுக்கு பரீட்சயமானவர்கள் என்பதாலும் ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் வாக்களிக்கவில்லை. இருப்பினும், ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.
மேலும், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட அளவிலான கூட்டம் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் டிசம்பர் 22ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை'- சிபிஎம், காங்கிரஸ் இடையே உச்சக்கட்ட மோதல்!