கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் நேபாளத்தின் போகாராவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு, ஜனவரி 20ஆம் தேதி இரவு எவரெஸ்ட் பனோரமா என்ற சொகுசு விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர்.
இதில், பிரவீன் கிருஷ்ணன் நாயர், ரஞ்ஜித் குமார் ஆகியோர் தங்களது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேர் ஒரே அறையில் தங்கினர். அடுத்த நாள் காலை (செவ்வாய்க்கிழமை) இந்த அறையில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கடுங்குளிர் நிலவும் அப்பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை கதகதப்பாக வைத்திருப்பதற்காக கேஸ் ஹீட்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியபோது அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
உயிரிழந்த எட்டு பேரின் உடல்கள் காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டு, உடற்கூறாய்வு நடத்தப்பட்டன. இதையடுத்து, அந்த உடல்கள் கேரள மாநிலத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க நேபாள அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய அவர், "இதுகுறித்து நேபாள அரசு தீர விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்" என்றார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றையும் முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை - சிவசேனா