இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மற்ற மாநிலங்களைவிட முன்னதாகவே கேரளாவில் வைரஸ் பரவல் தொடங்கியது. இருப்பினும் கேரளா அரசு எடுத்த நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் செயல்பாடுகளைப் பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் கேரளாவில்தான் பாதுகாப்பாக உணர்வதாக அம்மாநிலத்தில் கோவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த இத்தாலியர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்டோ டோனிஸோ கடந்த மாதம் கேரளா மாநிலத்திற்குச் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், அவர் மார்ச் 13ஆம் தேதி கேரளாவின் வர்கலா பகுதிக்குச் சென்றபோது அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
மார்ச் 26ஆம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தது தெரியவந்தது. இருப்பினும் கடந்த ஒரு மாதமாக அவர் தனிமைப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது கண்காணிப்பு காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் இத்தாலி செல்லவுள்ளார்.
இது குறித்து ராபர்டோ டோனிஸோ கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி. தற்போதுள்ள அனைத்து பிரச்னைகளும் சரி ஆனதும் திரும்ப இங்கு வர விரும்புகிறேன்.
கேரளா என்னுடைய மற்றொரு வீடு போன்றது. இங்கு நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அனைத்து பிரச்னைகளும் சரி ஆனதும் கண்டிப்பாக மீண்டும் இங்கு வருவேன்" என்றார்.
அவர் பெங்களூரு வரை சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்படவுள்ளார். அங்குத் தங்கவைக்கப்பட்டுள்ள மற்ற இத்தாலியர்களுடன் அவர் சொந்த நாட்டிற்கு விரைவில் திரும்பவுள்ளார்.
இதையும் படிங்க: செய்தியாளர்களுக்கு கரோனா என்பது வருத்தமளிக்கிறது - மத்திய அரசு