கரோனா வைரஸ் நோயின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கட்டுப்பாடுகளை சிறப்பான முறையில் செயல்படுத்தியதன் மூலம் கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனிடையே, கரோனாவால் பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவருகின்றன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க கேரள அரசு முடிவெடுத்தது. இந்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், அவசரச் சட்டத்தை கொண்டுவந்து ஊதிய குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக், "அவசர சட்டத்தின்படி, பேரிடர் காலத்தில் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 25 விழுக்காட்டை குறைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வயநாட்டிலுள்ள நோயாளிகளுக்கு நிச்சயம் உதவுவேன் - ராகுல்