கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகேயுள்ள வட்டவடா மலைக்கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு அங்குள்ள சலூன் கடைக்காரர்கள் முடி திருத்தம் செய்ய மறுப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அம்மாநில பட்டியலின நல ஆணையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதன்பின்னர் அவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு முடித்திருத்தம் செய்ய மறுத்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், வட்டவடா கிராம பஞ்சாயத்து அக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ததோடு, புதிய முடிதிருத்தும் கடை ஒன்றை கோவிலூர் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் திறக்கப்பட்டது. இப்புதிய கடையை தேவிகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.
இதன்பின்னர் பேசிய அவர், "சாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் இங்கு முடி வெட்டி, சவரம் செய்யப்படும். இதர சலூன் கடைக்காரர்கள் வாங்கும் கட்டணமே இங்கும் வசூலிக்கப்படும்" என்றார். முடி திருத்துவதில் நிலவிவந்த தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வட்டவடா பகுதியில் அரசே முடிதிருத்தும் கடையை திறந்துவைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ’தலைவர்னு உன் பெயரை எழுதவிட மாட்டேன்’ - பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்