கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நேற்று முன்தினம் காணொலிக் காட்சி மூலம் நாட்டின் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய படகு அவசர ஊர்தி பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அவசர ஊர்திகளுக்கு பிரதிக்ஷா, பிரத்யாஷா, காருண்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அவசர ஊர்திகளின் மொத்த மதிப்பு 1,024 கோடி ரூபாய் என கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர ஊர்திகளை மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி அம்மா, மீன்வளத்துறை செயலர் டின்கு பீஸ்வால் ஆகியோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர். இந்த அவசர ஊர்திகள் எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய கடல்சார் பகுதிகளில் வாழும் மக்களின் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஒக்கி புயல் பேரழிவின்போது இதுபோன்ற அவசர ஊர்தி வசதிகள் இல்லாதது, மீட்பு நடவடிக்கைகளைக் கடுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து, அவசரகால சூழ்நிலைகளுக்கு ஆயத்தமாக படகு அவசர ஊர்திகளை விரைந்து தயாரிக்க, மாநில அரசு சிறப்பு அக்கறை எடுத்து மூன்று நவீன அவசர ஊர்திகளை தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
இது 23 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் அகலம், மூன்று மீட்டர் ஆழம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த அவசர ஊர்திகளின் உதவியுடன், ஆபத்துக் காலத்தில், கடல் மத்தியிலிருந்து கடற்கரைக்கு பத்து நபர்கள்வரை ஒரே நேரத்தில் பாதுகாப்பாக அழைத்து வர முடியும்.
மேலும், சவக்கிடங்கு உதவி, முதலுதவி, முதன்மை கவனிப்பை எளிதாக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் என அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.