கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகை ஸ்வப்னா சுரேஷின் பிணை வழக்கு கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் காவலில் உள்ள அவர் உடல்நலத்தை காரணம் காட்டி பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னா சுரேஷுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஸ்வப்னா சுரேஷ் மீது சுங்கத் துறை அந்நியச் செலாவணி மற்றும் கடத்தல் தடுப்புச் (COFEPOSA) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்துள்ளதால், அவர் தொடர்ந்து காவலில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் பிணை விண்ணப்பித்திருந்த நிலையில், அதன் விசாரணை வரும் 15ஆம் தேதி (அக். 15) வரவுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கத்தை கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் தனக்குள்ள நெருக்கம் மூலம் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார் எனப் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தற்சார்பு இந்தியா பொருளாதார நிதிச்சலுகை பெரும் தோல்வி: காங்கிரஸ் தாக்கு