திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி ரகசிய பார்சல் ஒன்று வந்தது. அந்தப் பார்சலை சோதனையிட்ட சுங்கத் துறை அலுவலர்கள், அதிலிருந்த 30 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தல் தொடர்பாக தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் அலுவலர் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ ) அலுவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரது காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இருவரின் காவலையும் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்தின் நீதிமன்ற காவலும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிக்க உள்ளது.