கரோனா வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும், பலரும் நான்கு மாதங்களுக்கு மேல் ஊரடங்கினால் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் வேகமாக செல்லும்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அந்த காணொலியைக் கண்ட காவல் துறையினர் அவரைத் தேடிக் கண்டுபிடித்ததில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் அவர் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ஹெல்மெட் அணியாததற்கும், வேகமாகச் சென்றதற்கும் அப்பெண்ணிடமிருந்து 20,500 ரூபாய் அபராதத் தொகையை காவல் துறையினர் வசூலித்தனர்.