கேரளாவில் திருநங்கைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையை அதிகரித்துள்ளதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற விரும்புவர்களுக்கு இதுவரை ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் சிகிச்சைகளின் எண்ணிக்கை மற்றும் செலவுகளைக் கணக்கில் கொண்டு, தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாற விரும்புவர்களுக்கான உதவித்தொகை ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கு கொள்கைத் திட்டத்தை வகுத்த பெருமை கேரள மாநில அரசுக்குதான் கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி சமூக நலத்திட்டங்கள் மற்றும் கல்வித் துறைகளில் திருநங்கைகளுக்கு சிறப்புச் சலுகைகளையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.