கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து கொடுத்துள்ளனர். மனிதர்களின் சுயநலத்தை அறியாத யானை அன்னாசி பழத்தைக் கடித்தபோது, அந்த வெடி வெடித்து அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயத்தின் கடும் வலி மற்றும் வேதனையுடன் அருகிலிருக்கும் வெள்ளியாற்றில் இறங்கியுள்ளது. ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்ற அந்த யானை, பரிதாபமாக உயிரிழந்தது. அதை உடற்கூறாய்வு செய்ததில், அது கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த உயிரிழப்பு பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொல்லம் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்த பெண் யானையின் மரணத்திலும் சந்தேகம் ஏற்படுவதாக வனத்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து மூத்த வனத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஏப்ரல் மாதம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகா பத்பநாதபுரம் வனப்பகுதியில் ஒரு பெண் யானை வாயில் காயத்தோடு உலாவியது. நாங்கள் அதைக் காணும் போது அது பலமான காயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்தது. அதன் தாடை உடைந்திருந்ததால் எதையும் உண்ண முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. நீண்ட நாள் பசியுடன் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது.
மேலும், அதன் மந்தையிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து யானைக்கு சிகிச்சையளிக்க அணுகினோம். ஆனால் அதை புரிந்து கொள்ள முடியாத யானை திமிறியபடி, தன் இனத்தை நோக்கி ஓடியது. மறுநாள் மீண்டும் அந்த யானை தன் இனத்திலிருந்து விலகியிருப்பதைக் கண்டோம். பின்னர் அதற்கு முறையான சிகிச்சை அளித்தோம். ஆனால் துரதிரஷ்டவசமாக யானை உயிரிழந்தது” என்றார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு வனத்துறை அலுவலர், “கர்ப்பிணி யானையின் உயிரிழப்பு, கொல்லம் வனப்பகுதியில் இறந்த யானையில் மரணத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற சம்பவங்களில் தகவல்களை சேகரிப்பது மிகவும் கடினம். யானைகள் மைல் கணக்கில் பயணிப்பதால் அவை சந்திக்கும் பிரச்னைகளை துல்லியமாக கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. யானைகள் காயம்பட்டு, தன் இனக்குழுவிலிருந்து அந்நியப்பட்டு தனிமையில் இருப்பதை வனத்துறையினர் கண்டறியவே ஏழு நாள்களுக்கு மேலாகிறது, இது பிரச்னைகளை இன்னும் கடினமாக்குகிறது” என்றார்.
மனிதநேயமே அல்லாமல் விலங்குகளை சித்ரவதை செய்யும் மனிதர்கள் இருப்பதை விலங்குகளின் கொடூர மரணம் தொடர்ந்து உறுதிசெய்கிறது. இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை, பிற உயிரினங்களுக்குமானது என மனிதர்கள் உணரும்வரை இம்மரணங்களில் முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.
இதையும் படிங்க: பறிபோன இரு உயிர்கள் - கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை வைத்து வழங்கிய மிருகங்கள்