கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்றி, கழிவுகளை அகற்ற கேரள மாணவர்கள் கண்டுபிடித்த நவீன இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். அதேபோன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் மூலம் பட்டியலின மக்களும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பல மாநில முதலமைச்சர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். கேரள முதலமைச்சரின் செயல்களை தமிழ்நாட்டு இளைஞர்களும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், 20 லட்சம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கே-போன் திட்டத்தின் மூலம் இலவச இன்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளி சிறுவனுடன் பினராயி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
கேரளாவில் மகா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாற்றுத்திறனாளி பிரனாவ் என்ற இளைஞர் வழங்கிய நிவாரண நிதியை பினராயி விஜயன் பாராட்டி மகிழ்ந்தார். இரண்டு கைகளை இழந்த அந்த இளைஞன், பினராய் விஜயனுடன் கால்களால் எடுத்துக்கொண்ட செல்ஃபி பலரது பாராட்டை பெற்றுள்ளது. அதேபோல் தனது கால்களால் நிவாரண உதவி வழங்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த செல்ஃபியை பார்த்த நெட்டிசன்கள் உலகின் தலைசிறந்த செல்ஃபி இது என பாராட்டி வருகின்றனர்.