கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் உள்ள ராஜமலை - பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டித்தரப்பட்ட வரிசையான 20 வீடுகள் கொண்ட கட்டடம், கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது.
இந்த நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்திருப்பதாகத் தெரிகிறது. இவர்களில் 55 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் ஆவர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து ஏழாவது நாளாக மாநில மற்றும் தேசிய மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தலைமைச் செயலர், மாநில வருவாய்த்துறை அமைச்சர், காவல் துறைத் தலைவர் ஆகியோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, கள நிலவரங்களை ஆய்வு செய்தனர்.