கேரளாவில் 36 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதில் ஒருவருக்கு கரோனா உறுதியாகும் சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தின் பொருளாதார நெருக்கடி சிறு தொழில் முனைவோரின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “பெரும்பால வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், விநியோகச் சங்கிலியில் பிளவு உண்டானதாலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை அதிகமுள்ளது. இந்த நெருக்கடி வேளையில் வேலை இழந்தவர்களுக்கும், பிற நாடு மற்றும் மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது அவசியமான ஒன்று” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் தொழில் முனைவோர்களை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வீதம் 5 ஆயிரம் புதிய நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கேரள நிதிக் கழகம் (Kerala Financial Corporation) இந்த திட்டத்தைச் செயல்படுத்தும். இதில் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். கடன் தொகையில் 3 விழுக்காடு தொகையை அரசு மானியமாக வழங்கும். இந்த திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: மீண்டெழும் பொருளாதாரம்: நம்பிக்கையுடன் செயல்படும் இளைஞர்கள்