திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது எனக் கூறுவார்கள். திருமணத்தை மணமகன் - மணமகன் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பெரும் பட்டாளமே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.
ஒரு வாரத்திற்கு அப்பகுதியே திருவிழா போல்தான் காட்சியளிக்கும். அந்த அழகிய நிகழ்வு நடைபெறும் நல்ல நாளை ஜோதிடரிடமோ அல்லது பெரியவர்களிடமோ கேட்டு உறுதிசெய்வார்கள். திருமணத்திற்கான சிறிய விஷயங்களைக்கூட பார்த்துப் பார்த்து முடிவுசெய்வார்கள்.
ஆனால், கேரளாவில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோடிக்கு மூன்றாவது முறையாகத் தற்போது திருமணம் தள்ளிச் சென்றுள்ளது. ஏனென்றால் நாட்டின் தற்போதைய நிலைமை சரியில்லை. இருப்பினும் மனம் தளராமல் அடுத்த திருமண தேதியை முடிவுசெய்ய காத்திருக்கும் இந்தத் திருமண ஜோடியின் அன்பு நெகிழவைக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்ஹிபலம் (Eranhipalam) பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்சந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சாண்ட்ரா சந்தோஷ் என்ற பெண்ணுக்கும் நாளை (2020 மார்ச் 22) திருமணம் நடக்கவிருந்தது.
ஆனால், கரோனா வைரஸ் தாக்கத்தால் திருமண நிகழ்ச்சிகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு காரணமாக திருமணம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. ஒரு தடவை திருமணம் நின்றால் சாதாரணம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த ஜோடியின் மண வாழ்க்கை இரண்டு முறை தள்ளிப்போய் தற்போது இயற்கையின் நியதியால் மூன்றாவது முறையாகவும் தடை ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்த ஜோடிக்கு முதலில் 2018 மே 20ஆம் தேதி திருமணம் நடத்த முடிவுசெய்தனர். ஆனால், அந்த நேரத்தில் கேரளாவை நிபா வைரஸ் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இதனால், இவர்களின் திருமணம் அரசின் அறிவுறுத்தலின்படி நிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர், மாப்பிள்ளையின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்ததால் கொஞ்சம் நாள்கள் திருமணப் பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, 2019இல் ஓணம் விடுமுறையில் திருமணத்தை நடத்த இருவரின் வீட்டாரும் முடிவுசெய்திருந்தனர்.
ஆனால், அப்போது அவர்களுக்குப் புதிய சிக்கல் தேடிவந்தது. ஆம்! அது கேரளாவை துவம்சமாக்கிய பெருவெள்ளம். இது அம்மாநில மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. இதனால், அப்போதும் அந்தத் திருமண ஜோடி கைகோக்கும் நிகழ்வு தள்ளிச் சென்றது.
பின்னர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு, மார்ச் 22ஆம் தேதி திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என இருவீட்டார் முடிவுசெய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான கசப்பான சம்பவங்களை நேர்மறையாக எடுத்துக்கொண்ட மணமகன்-மணமகள் இருவரும் வரும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திருமணத்தை நடத்த முடிவுசெய்துள்ளனர். கரோனா வைரஸ் காரணமாகக் கேரளாவில் தற்போதுவரை 40 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீ வாக்கிங் போகணுமா... ஜாலியா போயிட்டு வா: ட்ரோன் விட்ட நபர்