கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வலரா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அடிக்கடி மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். கோபமடைந்த அவரது தாயார் சிறுமியைக் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி, அவரது 21 வயது தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மகளை காணாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியையும், அவரது தோழியையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன இருவரும் ஜூன் 6ஆம் தேதி காலை வீடு திரும்பியுள்ளனர். உடனே அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைக்க உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அதற்குள் 17 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் மரணம் குறித்து கேள்விப்பட்ட அவரது 21 வயது தோழியும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் தற்போதுவரை சிறுமி பயன்படுத்திய மொபைல் போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல் துறை வட்ட ஆய்வாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஆபாசமாக புகைப்படம் எடுத்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞர்கள் போக்சோவில் கைது!