டெல்லி யூனியன் சட்டப்பேரவைக்கு கடந்த 8ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் வருகிற 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், ஈடிவி பாரத் செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது, “வாக்குகள் எண்ணப்படும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஆனாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகள் தெளிவாக கூறுகின்றன.
டெல்லியில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார். பாஜகவினரின் பேச்சுகளை பற்றி கவலையில்லை.
டெல்லி மக்கள் ஆம் ஆத்மி பக்கம். நாங்கள் வளர்ச்சிக்கான அரசியலை முன்வைத்தோம். எங்களின் தேர்தல் அறிக்கை வளர்ச்சி மற்றும் டெல்லி மக்கள் மேம்பாடு குறித்தே பேசுகிறது” என்றார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக உள்ளன.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 47 தொகுதிகளும், பாஜகவுக்கு 23 தொகுதிகளும் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சி வோட்டர் கருத்துக் கணிப்புகள் மட்டும் காங்கிரசுக்கு நான்கு தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என கூறுகிறது. மற்ற பிரதான கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி தனிமெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் கூறுகின்றன.
2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்பு முடிவுகள் இருந்தன. ஆனால் முடிவுகள் தலைகீழாக அமைந்துவிட்டது. அந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது.
பாஜகவுக்கு மூன்று இடங்களே கிடைத்தது. ஆளுங்கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மீளும் பாஜக, உருகும் காங்கிரஸ், எழும் ஆம் ஆத்மி!