டெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் தீயணைப்புப் படை வீரர்களால் மீட்க்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர விபத்து குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவிட்டிருந்த ட்வீட்: "டெல்லியின் அனஜ் மண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்து மிகவும் கொடூரமானது. என்னுடைய எண்ணமெல்லாம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பற்றியே உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்: மிக மிக மோசமான செய்தி. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி: டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தத்தில் உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு!