பிரதமர் நரேந்திர மோடிக்கு, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மின்சாரச் சட்டத்தில் (வரைவு மின்சார மசோதா திருத்தச் சட்டம் 2020) திருத்தங்கள் மாநில மின்சார அமைப்புகளின் நிர்வாகத்தில் நேரடியாக பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு தேர்வுக் குழுவால் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை நியமிப்பது மற்றும் சில சூழ்நிலைகளில் அண்டை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பொறுப்புகளை ஒப்படைப்பது ஆகியவை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி அரசியல் தத்துவத்துக்கு எதிரானது.
ஆகவே, மத்திய அரசின் புதிய மின்சார மசோதா நாட்டின் மின்சாரத் துறையில் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இது கட்டணத்தை நிர்ணயிப்பது, ஒப்பந்தங்களை அமல்படுத்து என தொடங்கி பல மாநிலங்களின் பலவீனமான நிதிக்கு வழிவகுக்கிறது. மேலும், மானிய கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்க முற்படுகிறது. இதனால் மாநில அரசு பாதிக்கப்படும்.
இத்தகைய போக்கை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். விவசாயிகள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி இலவச மின்சாரம் பெற வேண்டும் என்பது தெலுங்கானா அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆகவே, மானியத்தை செலுத்தும் முறை மாநில அரசிடம் கொடுக்க வேண்டும். எனவே, இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தற்போதைய சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் ஆட்சேபகரமானதாக கருதி மாநில அரசு எதிர்க்கும்.
இவ்வாறு கே.சந்திரசேகர் ராவ் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐஎம் வழக்கு