ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பழங்குடியின இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபா மாயமாகி, ஒரு வாரத்திற்குப் பின்பு ரஸானா வனப்பகுதியில் இருந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் சிறுமிக்கு நான்கு தினங்களாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு, உணவுக்கூட வழங்காமல் 6 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆசிஃபா காணாமல் போனது குறித்து விசாரிக்கச் சென்ற காவலர்களான தலைமைக் காவலர் திலக் ராஜ், காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த் தத்தா இருவரும் ரூ.4 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக இருவரையும் சேர்த்து மொத்தம் எட்டு பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும், சஞ்சி ராம், பிரவேஷ் குமார், தீபக் கஜுரியா உள்பட மூன்று பேர் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 1 லட்சம் அபராதமும், மற்ற மூவருக்கும் ஐந்து ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது குறித்து சஞ்சீவ் ராமின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’இவ்வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அரசு எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்’ என்றனர்.