அரசியலமைப்பு சட்டம் 370 மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மத்திய அரசு சட்டத்தை நீக்கி மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையொட்டி, ஜம்மு, காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையிலும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி வீட்டுக் காவலிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார். 14 மாதத்திற்கு பிறகு அவரை அக்டோபர் 13ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் அரசு விடுவித்தது.
இந்நிலையில், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி "மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்தம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, ஐந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து குப்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஜாவித் முஸ்தபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தரிகாமி, அவாமி மக்கள் மாநாட்டுக் கட்சி துணை தலைவர் முசபர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஃபரூக் அப்துல்லா, "கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கப் போராடுவோம். காஷ்மீர் பிரச்னை அறவழி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும். அரசியலமைப்பு போராட்டத்தை மேற்கொள்வோம்.
சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க இந்தக் கூட்டணி அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மீண்டும் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர். அப்போது, வழிகாட்டுதல் வகுக்கப்படும்" என்றார். அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக முக்கிய அரசியல் கட்சிகள் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட மோடி!